புதுடெல்லி: மத நடைமுறை அரசியலமைப்பை சோதிக்க ஒழுக்க நெறியை அளவுகோலாகக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது 13வது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கேள்வியெழுப்பிய நீதிபதி பி.வி.நாகரத்னா,’ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நீதிமன்றத்தின் முன்வந்து, மதவிலக்கை மீண்டும் அமல்படுத்துமாறு கோரலாம்.
அது தங்கள் மதத்தின் ஒரு பகுதி என்றும், அதனால் தங்கள் மத உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் அவர்கள் வாதிடலாம். இப்போது, இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இந்த நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்?. ’ என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி ஜால்மால்யா பாக்ஷி,’ஒரு சட்டத்தின் அல்லது ஒரு மத நடைமுறையின் அரசியலமைப்பு செல்லுபடியை சோதிப்பதற்கு, அரசியலமைப்பு ஒழுக்கநெறியை அளவுகோலாகக் கொள்ள முடியாது. எனவே, 26-வது பிரிவின் கீழ் உள்ள ஒழுக்கநெறிக்குள் ‘அரசியலமைப்பு ஒழுக்கநெறி’ என்ற சொற்றொடரைப் பொருத்திப் பார்ப்பது, அந்த விதியை விளக்குவதற்கான சரியான வழியாக இருக்காது. ’ என கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
