சென்னை: தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது குறித்து விமர்சனம் செய்த, தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி தனது பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் தலைமையை கண்டித்து பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி, கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சில விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகமது சாகிப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக இளைஞர் காங்கிஸ் பொதுச் செயலாளர் அலிம் அல் புகாரி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அலிம் அல் புகாரி வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
