தனி பெரும் கட்சியாக தவெக மக்களால் தேர்வு விஜய்யை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

 

சென்னை: தவெக தலைவர் விஜய்யை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் விஜய் ஆதரவு தர வேண்டும் என கடிதம் எழுதியிருப்பது குறித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம். இதற்காக உயர்நிலைக் கூட்டம் கூட்ட இருக்கிறோம். பிஜேபி, மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழ்நாடு அரசியலில் தலையிட்டு குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தனி பெரும் கட்சியாக தவெக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. எனவே அவரை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும். தவெகவிற்கு யார் யார் ஆதரவு தருகிறார்கள் என்ற பட்டியலை ஆளுநர் கோர முடியாது. ஆட்சி அமைக்க அவர் கோருகிறார், ஏனென்றால் அவர் 108 எம்.எல்.ஏ.க்களுடன் பெரிய கட்சியாக இருக்கிறேன் என்று. அப்படி என்றால் அவரை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அவரிடம் பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டமன்றத்தில்தான் அவர் நிரூபிக்க வேண்டும். எனவே ஆளுநர் காலம் தாழ்த்துவது பிஜேபி திரைமறைவில் இருந்து தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளது.

இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது இல்லை. எங்களைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் முதல்வராக பதவி ஏற்பது தான் சரி. இதற்கு ஒருபோதும் நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். காங்கிரஸ், இடதுசாரிகள் உடன் பணியாற்றுகிறோம், ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்று விஜய் சொல்வதை பரிசீலனை செய்கிறோம். இதுகுறித்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் நாங்கள் கருத்தியல் ரீதியாக இருப்பவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து முடிவை அறிவிக்க இருக்கிறோம். விஜய்யை தங்கள் கைப்பாவையாக பிஜேபி வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அவரை உடனே பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் பிஜேபி தமிழ்நாடு அரசியலை மேலும் குழப்பப் போகிறார்கள் என்று தான் பொருள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: