சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைக் கோரும் கடிதத்தை தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனிடம் வழங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டி: சட்டப்படி தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். அவர் செய்யவில்லை என்றால் அடுத்தகட்ட முடிவை எடுப்போம். நாங்களாகவே ஆளுநரைச் சந்தித்து மீண்டும் கடிதம் கொடுத்தோம். விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் எங்களின் ஆதரவைக் கோரியுள்ளோம், அவர்கள் ஆலோசித்து முடிவைச் சொல்வார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை, அதற்கான எண்ணமும் இல்லை.
ஆதரவு கொடுப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு என எங்கள் தலைவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியில் பங்கு இருந்தால்தான் அவர்களின் கொள்கைகளைச் செயல்படுத்த முடியும். தவெகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எங்கள் தலைவருக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் விஜய்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
