சென்னை: தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது 234 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. இந்த நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி, அதிக இடங்களைப் பிடித்த விஜய்யின் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோருவதில் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் ஆட்சியமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். விஜய் தலைமையிலான புதிய அரசு அமையட்டும். அவர்கள் மக்களுக்குச் செய்துள்ள வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனிப்போம். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.
முக்கியமாக, புதிய அரசு நிலை பெறுவதற்கும், அவர்கள் தங்களது நிர்வாகத்தைத் தொடங்குவதற்கும் போதிய அவகாசம் வழங்க நாங்கள் விரும்புகிறோம். எனவே, அடுத்த 6 மாதங்களுக்கு தவெக அரசுக்கு திமுக தரப்பிலிருந்து எந்தவித இடையூறும் அல்லது அச்சுறுத்தலும் இருக்காது. 6 மாதங்களுக்குப் பிறகு அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து எங்களது அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம். அரசியலமைப்பு நெருக்கடி கொடுப்பதையோ அல்லது உடனடி தேர்தலையோ திமுக விரும்பவில்லை. திமுக அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களையும், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் புதிய அரசு தொடர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும். விஜய் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்தது சாத்தியமில்லை. நாங்கள் செய்தது போல் குறைந்தபட்சம் ரூ.1,000வது வழங்குங்கள்.
திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையின் 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. நீட் ரத்து போன்ற சிலவற்றை மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக செயல்படுத்த முடியவில்லை. இந்த தேர்தலிலும், எங்களால் நிறைவேற்ற முடிந்தவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளித்தோம். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போன்ற த.வெ.க.வின் வாக்குறுதிகளை அவர்களால் செயல்படுத்த முடியுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் செய்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
