புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை; 10ம் தேதி வரை யாரும் வெளியில் செல்லக்கூடாது

 

புதுச்சேரி: புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, 10ம் தேதி வரை யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று உத்தரவிட்ட எடப்பாடி, அனைவரிடமும் உறுதிமொழி கையெழுத்து வாங்கி உள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் அவசியம். ஆனால், விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளதால் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் வந்துவிடும். ஆகையால் தவெகவிடம் 107 எம்எல்ஏக்களும், காங்கிரசிடம் 5 எம்எல்ஏகளும் என மொத்தம் 112 எம்எல்ஏக்கள் தான் உள்ளது. எனவே, 118 சீட் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 6 எம்எல்ஏக்கள் தேவை. எனவே ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் நேற்று முன்தினம் மாலை எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ‘‘அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும்.

தலைமையில் இருந்து உத்தரவு வரும்வரை சென்னையை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது’’ என எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த கூட்டத்துக்கு பின் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், ‘‘தவெகவுக்கு அதிமுக ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுக பெரிய இயக்கம். எந்த சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் கூறுகிறேன்’’ என்றார். அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க ஆதவ் அர்ஜூனா மற்றும் செங்கோட்டையன் குதிரை பேரத்தில் ஈடுபடுவதால், எம்எல்ஏக்களை தக்க வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் புதுச்சேரி

மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரிசார்ட்டில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 24 பேர் நேற்று முன்தினம் இரவு புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டிற்கு சென்றனர். தொடர்ந்து நள்ளிரவு வரை ஒவ்வொரு எம்எல்ஏக்களாக ரிசார்ட்டுக்கு வந்தனர். மொத்தம் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டிற்கு வந்தனர். நேற்றிரவு அங்கு தங்கி எம்எல்ஏக்கள் பாதுகாப்பு குறைப்பாடுகள் இருப்பதாக கூறியதால், நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஆர்கேஎன் ரிசார்ட்டுக்கு அனைத்தும் எம்எல்ஏக்கள் மாற்றப்பட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்குள் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 47 எம்எல்ஏக்களும் ரிசார்ட்டுக்கு வந்தடைந்தனர்.

இதையடுத்து, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு 7 மணியளவில் வந்தடைந்தார். அவரை புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து ரிசார்ட்டின் உள்ளே அதிமுக எம்எல்ஏக்களுடன் பழனிசாமி 1 மணி 15 நிமிடம் நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி ேபசுகையில், நல்லதே நடக்கும். அனைவரும் பொறுமையோடு இருக்க வேண்டும். நான் சொல்லும் வரை, அதாவது வருகிற 10ம் தேதி வரை யாரும் புதுச்சேரியை விட்டு புறப்பட வேண்டாம். தமிழக அரசியல் சூழல் அதிமுகவை நோக்கி வரும்’ என்றார். பின்னர், ‘‘பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’’ என உறுதி மொழி தந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். பின்னர் வெளியே வந்த எடப்பாடி, பத்திரிகையாளர்களை சந்திக்காமல், சென்னை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், எம்எல்ஏக்கள் வெளியே செல்லாதபடியும், வெளி ஆட்கள் எம்எல்ஏக்கள் தொடர்பு கொள்ள முடியாதபடியும் அதிமுக மூத்த தலைவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

 

Related Stories: