விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ள ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்.!!

டெல்லி: ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு விரைவில் வருகை தர கூடும் என ஈரானிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரும் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள BRICS வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி புதுடெல்லிக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவித்திருக்கும் ஈரானிய வட்டாரங்கள், BRICS அமைப்பிற்கு தங்கள் நாடு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஈரான் இந்த அமைப்பில் முறையாக இணைந்ததிலிருந்து, முக்கிய BRICS கூட்டங்களில் தங்கள் நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்பதை உறுதி செய்து வருவதாகவும் கூறியுள்ளன.

ஒருவேளை BRICS உச்சிமாநாட்டிற்காக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்தால், அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாக இருக்கும். மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் ‘BRICS’ கூட்டமைப்பு ஒரு ஆக்கபூர்வ பங்கை வகிக்க ஈரான் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வர கூடும் என்று வெளியாகி இருக்கும் தகவல், மேற்கு ஆசிய (மத்திய கிழக்கு) பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈரான் அமைச்சரின் வருகை நிகழ்வு இந்தியா-ஈரான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பிராந்திய நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும் வகையில் அமைய கூடும்.

எனினும் அதிகாரப்பூர்வ வட்டாரங்களிடமிருந்து இதற்கான இறுதி உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை. எனினும் அரசு வட்டாரங்கள் இந்த பயணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று சுட்டி காட்டியுள்ளன. இதனிடையே பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகம் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்படும் என்று இந்திய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

 

Related Stories: