ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

 

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை மே 7ம் தேதி இந்தியா மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை துல்லியமாக தாக்கி அழித்தது. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ஓராண்டுக்கு முன்பு, நமது ஆயுத படையினர் சிந்தூர் நடவடிக்கையின்போது, இணையற்ற தைரியத்தையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தினர். பஹல்காமில் அப்பாவி இந்தியர்களை தாக்க துணிந்தவர்களுக்கு நம் ஆயுத படை தகுந்த பதிலடி கொடுத்தனர். அத்தகைய நம் படைகளின் வீரத்தை ஒட்டுமொத்த தேசமும் வணங்குகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடி மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அசைக்க முடியாத நிலைப்பாட்டை, ஆபரேஷன் சிந்தூர் வெளிக்கொணர்ந்தது. மேலும், நமது படைகளின் தொழில்முறை, ஆயத்த நிலை, ஒருங்கிணைந்த வலிமையையும் சிந்தூர் எடுத்துரைத்தது. பயங்கரவாதத்தை தோற்கடித்து, அதனை அழிப்பதற்கான நமது தீர்மானத்தில் நாம் எப்போதும்போல உறுதியாக இருக்கிறோம்.

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா அடைந்த அசாதாரண வெற்றி, நமது துணிச்சலான வீரர்களின் குறிப்பிடத்தக்க வீரம், தேசபக்திக்கு எடுத்துக்காட்டு. நம் வீரர்களின் வெல்ல முடியாத தைரியம், அசைக்க முடியாத உறுதிப்பாடு, கடமைக்கான அர்ப்பணிப்பை எண்ணி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்கிறார்.

Related Stories: