புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது 12வது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்கள் ஆதரவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கம்பாட்டா,\\” இந்த விவகாரத்தில் நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஒரு நம்பிக்கை அல்லது பழக்கம், ஒரு சமூகம் அல்லது மதப்பிரிவின் உண்மையான நம்பிக்கை என்று ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டால், ஒரு நீதிபதி அதை ஏற்கக் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்கான ஆதாரம் இருந்தாக வேண்டும். இதனை உச்ச நீதிமன்றமே பல தீர்ப்புகளில் விளக்கியுள்ளது. குறிப்பாக ஷிரூர் மடம் வழக்கே நீதித்துறை மறுஆய்வின் வரம்புகளை அங்கீகரித்தது. பிஜோ இம்மானுவேல் வழக்கும், ஒரு நம்பிக்கை மதத்தைப் பின்பற்றுவதன் அல்லது மதத்தின் நடைமுறையின் ஒரு பகுதியாக உண்மையாகவும் மனசாட்சியுடனும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று கூறியுள்ளது.
இதைத்தவிர குறிப்பாக சரத்துகள் 25(1) மற்றும் 26 ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்படுவதாகப் படிக்கப்படக்கூடாது. பிரிவு 26, பிரிவு 25(1)ல் இருந்து உருவாகிறது. இருப்பினும், தாங்கள் இந்த முரண்பாட்டின் அடிப்படையில் தொடர்வதாகக் கொண்டால், எப்படியிருந்தாலும் இதுவே ஒருவேளை மிகவும் பாதுகாப்பான வழியாகும். இதில் கடினமான வழக்குகளை அனுதாபத்தின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. உங்கள் இதயம் ஒரு குறிப்பிட்ட தனிநபருக்காகத் துடிக்கலாம். ஆனால் ஒரு பிரிவின் தன்னாட்சியை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். எனவே சட்டப்பிரிவு 26(பி) என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அரசின் நடவடிக்கைக்கு எதிரான தன்னாட்சிக்கான ஒரு அடிப்படை உரிமையாகும். அது பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஆனால் சரத்து 26(பி) என்பது ஆதிக்கத்திற்கான உரிமை கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் தயவுசெய்து தன்னாட்சியை ஆதிக்கத்துடன் ஒன்றிணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முரண்பட்ட நம்பிக்கை இருப்பதாலேயே மத சுயாட்சி பாதிக்கப்படுகிறது என்று அர்த்தமல்ல. அந்த சுயாட்சி என்பது அடிப்படையில் அரசுக்கு எதிரானது. எனவே, சில சமயங்களில் நாம் மத சுயாட்சியை, தனிப்பட்ட உறுப்பினர்கள் மீதான ஒரு பிரிவின் கட்டுப்பாடு அல்லது அவர்கள் மீதான ஆதிக்கத்துடன் குழப்பிக் கொள்கிறோம்.
அந்தக் குழப்பம் ஏற்படக்கூடாது. பிரிவு 26(பி) என்பது அடிப்படையில் அரசின் நடவடிக்கைக்கு எதிரான பாதுகாப்பாகும். ஒரு தனிப்பட்ட உறுப்பினருக்கு எதிரான விலக்குரிமை, மதக் கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும். ஒரு பிரிவுக்கு மத விஷயங்களில் அதன் விவகாரங்களை ஒழுங்கமைக்க அல்லது நிர்வகிக்க உரிமை இருப்பதால் மட்டும் அது ஏற்படுவதில்லை. எனவே, பிரிவு 26(பி)யின் கீழ் பாதுகாக்கப்படும் அடிப்படை அல்லது துல்லியமான நலன், அதாவது அரசின் நடவடிக்கைக்கு எதிரான பாதுகாப்பு அதுவே ஆகும். எனவே இந்த விவகாரத்தில் எங்களது தரப்பின் வாதங்களை மிக தெளிவாகவும் விரிவாகவும் வைத்துள்ளோம். அதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா,\\” பெண்கள் மதத்திற்கு வெளியே திருமணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை என்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயமா என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் கம்பட்டா,\\” இல்லை, மதம் இதுபோன்ற தடையை விதிக்கவில்லை என்பதை உயர்நீதிமன்றமே குறிப்பிடுகிறது. அதாவது கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு பார்சிப் பெண்ணை மதத்திலிருந்து விலக்குவதற்கு எதுவும் இல்லை. மறுபுறம், கலப்புத் திருமணம் கண்டிக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் தெரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்களை மதத்திலிருந்து வெளியேற்றுவதற்கு தடை எதுவும் இல்லை என்று தெரிவித்தார். மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா,\\”அப்படியென்றல் இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றால், உரிமையியல் வழக்குத் தாக்கல் செய்யுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதில்,\\” இந்த விவகாரத்தில் ஒரு கோணத்தில் பார்த்தால், சட்டப்பிரிவு 26 மதப்பிரிவு சார்ந்த அடிப்படை உரிமைகளைக் கையாள்கிறது. அங்கு, தனிநபர் அந்த மதப்பிரிவுக்குள் அடங்கிவிடுகிறார். மேலும் அடிப்படை உரிமையைக் கொண்டிருப்பது அந்த மதப்பிரிவு தான். எனவே, ஒரு மதப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அந்த மதப்பிரிவின் ஒரு மத நடைமுறையை எதிர்க்க முடியுமா என்ற கேள்வி கண்டிப்பாக எழாது. அது முடியவும் முடியாது. ஏனென்றால், அவர் அந்த மதப்பிரிவைச் சேர்ந்தவராகவும் அதை பின்பற்றுபவராகவும் இருந்தால், சாதாரணமாக அவரால் அதற்கு எதிராக ஒரு சர்ச்சையை எழுப்ப முடியாது. குறிப்பாக மத உரிமைகளுக்கும், அரசியலமைப்பு உரிமைகளுக்கும் இடையில் ஒரு வரையறை இருக்க வேண்டும்.
இதேப்போன்று பார்சி சமூகப் புறக்கணிப்பு மற்றும் சபரிமலை நுழைவு குறித்து எடுத்துக் கொண்டால், அது ஒரு மத சடங்கு என்பதை பற்றியது தான் முழு பிரச்னையும். ஏனெனில் நுழைவை தடுப்பதற்கான கோரிக்கை அதன் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. இங்கே, எல்லாம் திருமணத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரு இந்து திருமணம் ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் திருமணம் ஒரு ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணம் ஒரு சட்டப்பூர்வமான திருமணம் ஆகும். அது சடங்கோ அல்லது ஒப்பந்தத் திருமணமோ கிடையாது. அங்கே, அதன் விளைவு நுழைவைத் தடுப்பதாகும். இங்கே, அவர்கள் நுழைவை கோருகிறார்கள். இதுதான் வேறுபாடாக உள்ளது என்று விளக்கமளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
