கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிய பாஜ அரசின் பதவியேற்பு விழா வரும் 9ம் தேதி நடைபெறும் என கட்சியின் மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 207 தொகுதிகளில் வென்ற பாஜ முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய அரசு பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய பாஜ அரசு வரும் 9ம் தேதி பதவியேற்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜ மேலிட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் கொல்கத்தாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில், முக்கிய மாநில தலைவரான சுவேந்து அதிகாரி சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து புதிய முதல்வராக சுவேந்து அதிகாரியை கட்சியின் மாநில தேர்தல் பார்வையாளர் அமித்ஷா அறிவிப்பார். இதற்கிடையே, புதிய அரசு பதவியேற்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்டப்பேரவை அமைப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல, புதிய சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் அறிவிப்பை மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் நேற்று லோக் பவனுக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வழங்கினார். தேர்தலில திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி இன்னும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
