மேற்கு வங்க நகராட்சி ஊழியர் நியமனத்தில் ஊழல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2 மாஜி அமைச்சர்கள் ஆஜராகவில்லை

 

கொல்கத்தா: நகராட்சி ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக 2 முன்னாள் அமைச்சர்கள் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகவில்லை. மேற்கு வங்கத்தின் நகராட்சிகளில் ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சுஜித் போஸ் மற்றும் ரதின் கோஷ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. நடைபெற்று முடிந்த சட்ட பேரவை தேர்தலில் பிதான் நகர் தொகுதியில் சுஜித் போஸ் தோல்வியடைந்தார். மத்யம்கிராம் தொகுதியில் ரதின் கோஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்த விசாரணை தொடர்பாக கடந்த 1ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுஜித் போஸ் ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ரதின் கோஷ் வீட்டில் கடந்த 2023ல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் பிறகு இரண்டு பேருக்கும் நேற்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், தேர்தலுக்கு பிந்தைய மோதல்களில் கட்சி தொண்டர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விசாரணையில் ஆஜராவதற்கு மேலும் சில நாட்கள் அவகாசரம் தர வேண்டும் என அமலாக்கத்துறைக்கு சுஜித் போஸ் கடிதம் எழுதியுள்ளார். ரதின் கோஷ் அனுப்பிய கடிதத்தில் கழிவறைக்கு செல்லும் போது கீழே தவறி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் 10 நாட்கள் ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளனர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு பேருக்கும் இன்னொரு தேதியில் ஆஜராவதற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: