சபரிமலை வழக்கை விட தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிரான வழக்கு முக்கியமானது; ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

புதுடெல்லி: சபரிமலை வழக்கை காட்டிலும் தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிரான வழக்கு முக்கியமானது எனக்கூறிய உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைக்க மறுத்து விட்டது. தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி கடந்த 2023 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, சதீஷ் சந்திர தர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘சபரிமலை தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

அதில் ஒன்றிய அரசு தரப்பில் நான் ஆஜராகி வாதாடி வருவதால், தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். இதை நிராகரித்த நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் வேறு எந்த விவகாரத்தையும் விட முக்கியமானது. உங்கள் உதவியாளர்கள் இன்று குறிப்புகளை எடுத்துக் கொள்ளட்டும். மனுதாரர்கள் தங்கள் வாதங்களை தொடங்கட்டும். அனைத்து வழக்குகளும் முக்கியமானவையே. சபரிமலை வழக்கை விசாரணைக்கே ஏற்றிருக்கக் கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக பத்திரிகைகளில் படித்தோம்’’ என்று கூறி, மனுதாரர்கள் தங்கள் வாதங்களை இன்றைக்குள் நிறைவு செய்யுமாறும், ஒன்றிய அரச தனது வாதங்களை வேறொரு தேதியில் முன்வைக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

 

Related Stories: