புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 4ம் தேதி தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை வெளியிடும் இணையதளத்தை 68 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ஊடுருவ முயற்சிகள் நடந்ததாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டன. அப்போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து 68 லட்சம் முறை அந்த இணையதளத்தை ஊடுருவ ஹேக்கர்கள் முயன்றுள்ளனர்.
அவற்றை தேர்தல் ஆணையம் தனது இசிஐநெட் இணைய பாதுகாப்பு நெறிமுறைகள் மூலம் தடுத்து முறியடித்ததாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இசிஐநெட் மொபைல் செயலி பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை அந்த செயலியை 10 கோடிக்கும் மேற்பட்ட பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
