சென்னை: கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பக்டோக்ரா நகருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளன. இதனால் மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். கோடை வெப்பத்தை சமாளிக்க ஏராளமானோர் மலை வாசஸ்தலங்கள் செல்கின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மலை வாசஸ்தலமான பக்டோக்ரா நகருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பதால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சென்னையில் இருந்து பக்டோக்ராவிற்கு நேரடி விமான சேவையை மே 1ம் தேதி (நாளை) முதல் தொடங்குகிறது. இந்த விமானம் திங்கட்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு பக்டோக்ரா சென்றடைகிறது.
அதேப்போல் காலை 9.45 மணிக்கு பக்டோக்ராவில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. இந்த விமான சேவைகள் கோடை கால சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பக்டோக்ரா மலை வாசஸ்தலம் சுற்றுலாத் தலமாக மட்டும் இல்லாமல், சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு கிழக்கு இமயமலையின் நுழைவாயிலாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் இடையே இந்த புதிய விமான சேவைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சார்பில், கோடைகால சிறப்பு அட்டவணைகளில் முதல் பகுதியாக மேலும் 11 நகரங்களான புனே, மும்பை, கொச்சி, பாட்னா, சண்டிகர், கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் நாளை முதல் கூடுதல் விமான சேவைகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
