கொடைக்கானலில் 4 நாள் ஓய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தீவிர தேர்தல் பிரசாரத்துக்கு பின் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த 25ம் தேதி வந்திருந்தார். பாம்பார்புரம் அருகே, தனியார் விடுதியில் தங்கினார். 3 நாட்களாக காலை வேளைகளில் கொடைக்கானல் ஏரிக்கரை சாலையில் நடைப்பயிற்சி, சைக்கிள் சவாரி சென்றார்.

அப்போது சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் முதல்வருடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். வின்டேஜ் மியூசியம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று முன்தினம் பார்வையிட்டார். தொடர்ந்து 4 நாட்கள் ஓய்வெடுத்த நிலையில், நேற்று காலை சென்னை செல்வதற்காக தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டார். அப்போது விடுதி வாசலில் காத்திருந்த கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்தார். அவர்கள் வழங்கிய மலர்க்கொத்து, புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் முதல்வருடன் புகைப்படம், செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது ஒரு சிறுமி ‘நீங்க தான் கெத்து; டிவிகே எல்லாம் வெத்து’ என்று முதல்வருக்கு வாழ்த்து கூறினார். தங்கும் விடுதியில் இருந்து காலை 9.10 மணியளவில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வத்தலக்குண்டு வழியாக மதுரை விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு பிற்பகலில் தனி விமானம் மூலம் கிளம்பி சென்றார்.

Related Stories: