ராசிபுரம், ஏப். 21: ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியில் ரோந்து பணியின் போது கீரிப்பிள்ளை பிடித்து வந்த 2 பேரை கைது செய்த வனத்துறையினர், கூண்டு மற்றும் வலையை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில், கம்பி வலைகளை பயன்படுத்தி சிலர் கீரிப்பிள்ளையை பிடித்து வருவதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனஅலுவலர் சத்யா தலைமையில், கோனேரிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பேரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த தங்கராசு மற்றும் வாசுதேவன் என்பதும், அப்பகுதியில் கீரிப்பிள்ளையை கம்பிவலையை பயன்படுத்தி பிடித்து வந்ததாக ஒப்புகொண்டனர். இதையடுத்து வலை மற்றும் கூண்டுடன் கீரிப்பிள்ளையை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.
