வாக்காளர்களை கவரும் பசுமை வாக்குச்சாவடி

ராசிபுரம், ஏப். 23: ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியில் கோடை வெயிலை தவிர்க்கும் வகையில் பசுமை வாக்குச்சாவடியை அதிகாரிகள் அமைத்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், திறந்தவெளியில் நீண்ட நேரம் வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதை தவிர்க்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாக்காளர்களை கவரும் வகையிலும், வெயிலின் உக்கிரம் தெரியாமல் இருக்கவும் இந்த மையத்தை ‘பசுமை வாக்குச்சாவடியாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

மையத்தின் முன்பகுதி முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் மேல் மற்றும் பக்கவாட்டுகளில் பசுமையான இலை தழைகள் மற்றும் தென்னங் குருத்துகள் கட்டி தொங்கவிட்டுள்ளனர். நுழைவு வாயிலில் குலைகளுடன் கூடிய வாழை மரங்கள் மற்றும் மாவிலை தோரணம் கட்டி, மங்கலகரமான வீட்டு விசேஷத்திற்கு வரவேற்பது போல வாக்குச்சாவடியை அலங்கரித்துள்ளனர். இந்த ஏற்பாட்டினால் வாக்குச்சாவடியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும், வாக்காளர் வசதிக்காக குடிநீர் மற்றும் நிழற்பந்தல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதை தேர்தல் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: