200க்கும் அதிகமான தொகுதியில் வெற்றி பெறுவோம் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி: சென்னையில் மகன்களுடன் வாக்களித்த பின்னர் பிரேமலதா பேட்டி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி. 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது மகனும் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகர், நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோருடன் நேற்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் குளோபல் பள்ளியில் குடும்பத்துடன் வந்து வாக்கு அளிப்பதற்காக வந்தனர்.

பின்னர் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் பிரேமலதா அளித்த பேட்டியில், “ தமிழகம் முழுவதும் தேமுதிக 10 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயமாக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி. 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மக்கள் பெரிய ஆதரவை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

இங்கே வாக்களித்துவிட்டு நான் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதிக்கு செல்கிறேன். விஜய பிரபாகரனும் அவர் போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்குச் செல்கிறார். முதல் முறை வாக்களிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் போய் ஓட்டு போடுங்கள். இதுதான் நமது ஜனநாயகம்.

அந்த ஜனநாயகத்தில் நமக்கு கிடைத்த உரிமையை நிச்சயம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். யாரும் வாக்களிக்காமல் இருக்க கூடாது. இளைஞர்கள்தான் நமது எதிர்காலம். எனவே உங்கள் மனதுக்கு எது சரியென்று படுகிறதோ அவருக்கு நீங்கள் வாக்களியுங்கள். நமது கடைமையை நினைத்து அனைவரும் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: