சென்னை: திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற 2026 ஜனநாயகத் திருவிழா, சாதனை வாக்குப்பதிவு, பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு, எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல், 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். ஒரு வாக்குதானே என எண்ணாமல், ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
* பீகார், கேரளா, புதுச்சேரியைப்போல் எஸ்ஐஆருக்கு பிறகு தமிழகத்திலும் வாக்கு சதவீதம் அதிகம்
கடந்த 2020ல் பீகாரில் நடந்த தேர்தலில் 57.29 சதவீத வாக்குகள் பதிவானது. எஸ்ஐஆருக்கு பிறகு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பீகாரில் இந்த வாக்கு சதவீதம் 66.91 ஆக அதிகரித்தது. அதேபோல், கேரளாவில் கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவானது.
இது கடந்த 9ம் தேதி நடந்த தேர்தலில் 79.63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021ல் நடந்த தேர்தலில் 82.2 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. கடந்த 9ம் தேதி நடந்த தேர்தலில் இந்த சதவீதம் 89.2 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், கடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 73.63. நேற்று நடந்த வாக்குப்பதிவில் இந்த சதவீதம் 85.14 ஆக அதிகரித்துள்ளது. எஸ்ஐஆருக்கு பிறகு நடந்த இந்த 3 மாநில தேர்தகளிலும் வாக்கு சதவீதம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
