புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்தியா எந்த விதமான தீவிரவாதத்திற்கும் ஒருபோதும் அடிபணியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த சமயத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப்படும் பைசரான் புல்வெளிப் பகுதியில் நுழைந்த 3 தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர்.
பாதுகாப்பு படையினர் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாத அந்த இடத்தில் காட்டுப் பகுதி வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் ஆண்களை தனியாக பிரித்து சுட்டுக் கொன்றனர். இது கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட தனது கணவர் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு அருகில், திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவரது மனைவி கண்ணீருடன் அமர்ந்திருந்த புகைப்படங்கள் நாட்டையே உலுக்கின.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத குழு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து இந்தியா ஆபரஷேன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி ராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராணுவ மற்றும் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்புகளை தகர்த்தது. இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மிக மோசமாக பாதித்தது. 2025 ஜூலையில் நடந்த தேடுதல் வேட்டையில், தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் தச்சிகாம் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்த அஞ்சலியில், ‘‘கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த கொடூரமான பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி உயிர்களை நினைவுகூர்கிறோம். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். ஒரு தேசமாக, நாம் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்தியா எந்த விதமான தீவிரவாதத்திற்கும் ஒருபோதும் அடிபணியாது.
தீவிரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது’’ என்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில், ‘‘தீவிரவாதம் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி. அதை எதிர்த்து போராடித் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும். தீவிரவாதம் மற்றும் அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா தொடரும்’’ என்றார்.
இந்திய ராணுவம் தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம் தரப்படும். நீதி வழங்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது. இத்துடன் ராணுவ வீரர்கள் புகைப்படத்துடன் ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்றும் ராணுவம் கூறி உள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் நினைவுநாளில் இரங்கல் தெரிவித்துள்ளன.
பஹல்காம் நினைவுதினத்தையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பைசரான் பகுதியில் மீண்டும் சுற்றுலா களைகட்டி உள்ள நிலையில் அங்கு பாதுகாப்புகள் தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளன.
* ராகுல் காந்தி அஞ்சலி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் தியாகத்தையும் அவர்களது குடும்பங்களின் வேதனையையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. இந்த கோழைத்தனமான செயலை செய்த குற்றவாளிகளையும் ஒருபோதும் மன்னிக்காது.
இவ்வளவு கொடூரமாக பறிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் நினைவு இன்று வரை நம் இதயங்களை உலுக்கிக் கொண்டே இருக்கிறது. தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது. அது எப்போதும் அப்படியே இருக்கும். வெறுப்பையும், அச்சத்தையும் பரப்ப முற்படும் சக்திகளுக்கு இந்தியா ஒருபோதும் தலைவணங்காது. அவர்களை எதிர்த்து இன்னும் அதிக வலிமை, ஒற்றுமை, உறுதியுடன் நிற்போம். ஜெய்ஹிந்த்’’ என கூறி உள்ளார்.
* காங்கிரஸ் தாக்கு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவரை காப்பாற்ற முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட உள்ளூர் குதிரைக்காரரின் வீரத்தையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். இது உளவுத்துறை தோல்வி என்பதை அப்போதைய துணை நிலை ஆளுநர் ஒப்புக் கொண்டார். 2008 நவம்பரில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நாடு புதிய உலகளாவிய மரியாதையை பெற்றுள்ளது. இது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் முழுமையான தோல்வியையும், ராஜதந்திர ஈடுபாட்டில் சுய புகழ்ச்சி மட்டுமே இருப்பதையும் பிரதிபலிக்கிறது. இதை அவர் நிச்சயம் மாற்றிக் கொள்ளவும் மாட்டார்’’ என தாக்கி உள்ளார்.
