சென்னை: சென்னை புளியந்தோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்; தமிழ்நாடு மக்களின் மத்தியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பது பார்க்க முடிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல உங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போல வேறு எந்த மாநிலத்திலும் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. டெல்லியில் இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது. மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையை முதலமைச்சர் வழங்கி வருகிறார். உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவித் தொகை திட்டம் எந்த மாநிலத்திலும் கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்கள் இனியும் தொடர வேண்டும் என்று கூறினார்.
