விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்த நிலையில் காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை இயங்காது. தேர்தல் காரணமாக 23ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று பட்டாசு ஆலை இயங்கியதாக கூறப்படுகிறது.

ஆலையில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்பொழுது உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தீ மற்ற அறைகளுக்கும் பரவியது. வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெடி சத்தம் கேட்டு சில பணியாளர்கள் ஆலையை விட்டு தப்பியோடினர். இந்த வெடி விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் வானுயரம் புகை சூழ்ந்துள்ள நிலையில் தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: