விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து; 20 உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவு!

 

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பெண்கள் உள்பட 24 பேர் உயிரிழப்பு; 20 உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்தது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உட்பட சுற்றுவட்டாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நேரடியாக ஒரு லட்சம் பேர், மறைமுகமாக 2 லட்சம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை உள்ளது. டிஆர்ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில் மொத்தம் 10 அறைகள் உள்ளன. இந்த ஆலையில் புஸ்வாணம், சங்கு சக்கரம் முதலான சிறிய ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ஆலையில் விடுமுறை நாளான நேற்று மொத்தம் 36 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3.10 மணியளவில், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறைப்பகுதியில் விதி மீறி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மருந்து உராய்வின் காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்த அறை வெடித்து சிதறியது. இதனைத்தொடர்ந்து அருகே இருந்த மற்ற 3 அறைகளுக்கும் தீ பரவியது. இதில் 4 அறைகளும் முற்றிலும் சேதமடைந்தன.இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சவந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த வெடிவிபத்தில் உடல் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 23 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், கலெக்டர் சுகபுத்ரா, எஸ்பி ஸ்ரீநாதா, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் எம்எல்ஏ ஏஆர்ஆர்.சீனிவாசன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் மீட்புப் பணியின்போது திடீரென மூலப்பொருட்கள் வெடித்துத் சிதறியதால் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது.

தீயணைப்புத் துறையினர், போலீசார் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த ஆலைத் தொழிலாளர்கள் தீயணைப்புப் படையின் வீரர்கள் மற்றும் காவலர்கள் என 21 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, வெடிவிபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

விதிகளை மீறி ஒரே நேரத்தில் அதிக வெடிகளை தயாரிக்க முயன்றதால் வெடிவிபத்து. பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுக்காமல் அதிக வெடிகளை தயாரிக்க முயற்சி. அதிக வெடி பொருட்களை மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக கலந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பெண்கள் உள்பட 24 பேர் உயிரிழப்பு; 20 உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்தது. 4 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு பணிக்காக நெல்லை, மதுரையில் இருந்து 14 சிறப்பு மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Stories: