தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அரசின் சாதனைகளை விளக்கி கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் ஏப்.20: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர் கார்த்திகேயன் தமிழக அரசின் 5 ஆண்டு சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் வேட்பாளரை ஆதரித்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி, பேரூர் பேரூராட்சி பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில்,‘‘2000 ஆண்டுகளுக்கும் பழமையான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சொட்டையாண்டி குளம் ரோடு, புட்டு விக்கி ரோடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் பெரிதும் பலன் அடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. திராவிட மாடல் ஆட்சி தொடர ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும். வேட்பாளர் என்.ஆர் கார்த்திகேயனுக்கு உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்’’ என்றார்.

இந்த பிரசாரத்தில் பேரூர் பேரூராட்சி தலைவரும், நகர செயலாளருமான அண்ணாதுரை, தொகுதி பொறுப்பாளர் வக்கீல் ராதாகிருஷ்ணன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகராஜன், பேரூர் பேரூராட்சி துணைத்தலைவர் நாராயணசாமி, சிஆர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் மோகன், தாமரை செல்வன், காங்கிரஸ் கவுன்சிலர் பேரூர் மயில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: