சோழிங்கநல்லூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்ட பேரவை தேர்தலை வாக்களிக்க பெருமளவில் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர்.
ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இறுதிக்கட்ட தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ஏராளமானோர் சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு படையெடுத்து வருவதால், சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காகவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை முதலே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்கள் குவியத் தொடங்கின. சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையமான தாம்பரத்திலும் வடமாநில தொழிலாளர்கள் ரயிலில் பயணம் செய்ய அதிகளவில் குவிந்தனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கி கட்டிட வேலை, உணவகப் பணி மற்றும் சிறுதொழில்களில் ஈடுபட்டுள்ள இத்தொழிலாளர்கள், தங்களது உடைமைகளுடன் ரயிலுக்காகக் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, ஹவுரா மெயில் ரயில் நடைமேடைக்கு வந்தபோது, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறுவதற்கு பயணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டனர். முன்பதிவு இல்லாத 4 பொது பெட்டிகளில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாக, அவர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து முறைப்படி ரயிலுக்குள் போலீசார் அனுப்பி வைத்தனர். பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்குப் பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில பயணிகள் கூறுகையில், ‘நாங்கள் எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கவும் சொந்த ஊருக்குச் செல்கிறோம். தேர்தல் முடிந்ததும் சில நாட்களில் மீண்டும் சென்னைக்கு திரும்புவோம்,’ என்றனர். பல தொழிலாளர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டும், சிலர் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தும் இந்த தேர்தலுக்காகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதலே மேற்கு வங்கத்தை நோக்கிச் செல்லும் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, காலையில் புறப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் மாலையில் புறப்படும் ஹவுரா மெயில் ஆகிய ரயில்களில் புலம் பெயர் தொழிலாளர்களின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. தினசரி ரயில்கள் மட்டுமின்றி, சிறப்பு ரயில்களிலும் இடமில்லாத அளவிற்கு ரயில்
களில் கூட்டம் அலைமோதுகிறது. தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால், ரயில்வே நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பணியாற்றும் இத்தொழிலாளர்களின் வாக்குகள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
