மதுரை, ஏப். 19: மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர்ராஜ் (40). இவரிடம், செல்போனில் பேசிய மர்ம நபர்கள், ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளனர். மேலும், அவர்கள் கூறிய ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு சங்கர்ராஜிடம் அறிவுறுத்தி உள்ளனர். இதனை நம்பிய அவர், பல பரிவர்த்தனைகளாக மொத்தம் ரூ.55 லட்சத்து 22 ஆயிரத்து 825ஐ முதலீடு செய்துள்ளார்.
ஆனால், அதற்குரிய லாபத்தொகை அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சங்கர்ராஜ், அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சங்கர்ராஜ், இதுகுறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
