தேவதானப்பட்டி, ஏப். 17: தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி டிவிநகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பரமன்(52). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெரியகுளம் சென்றுவிட்டார். நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணம் ரூ.5 ஆயிரம், மற்றும் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதே போல் அருகில் வசிப்பவர் பாண்டி மனைவி காமாட்சி(28). இவர் வீட்டை பூட்டிவிட்டு மில் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று வந்து வீட்டை பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பணம் ரூ.1,500 மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
