சோழவந்தான், ஏப். 17: சோழவந்தான் பகுதியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடுகள், திரளான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்படி சோழவந்தான் பிரளயநாதர் (சிவன்) கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் பிரளயநாதர் சுவாமி, பிரளய நாயகி அம்மன் மற்றும் சனீஸ்வரலிங்கம், நந்தீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் மற்றும் சட்டநாத சித்தர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இரும்பாடி காசி விசுவநாதர் கோயில், பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருவாலவாயநல்லூர் மற்றும் துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
