தாளவாடி அருகே பரபரப்பு பள்ளிக்குள் புகுந்த யானை கூட்டம்

சத்தியமங்கலம்,ஏப்.17: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடமாடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சிக்கஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் சிக்கஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்தன. காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 3 யானைகளும் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நடமாடின. அங்கிருந்த மூங்கில் மரங்களிலிருந்து தழைகளை தும்பிக்கையால் பறித்து தீவனம் உட்கொண்டன. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டும் பணியை மேற்கொண்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானைகள் பள்ளி வளாகத்திற்குள் நடமாடிய சம்பவம் தாளவாடி மலைப்பகுதி கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: