சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களை கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் திமுகவே அள்ளும் என்று ஏஎன்எஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 21ம் தேதி மாலையுடன் ஓய்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை முற்றுகையிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அரசியல் கட்சியினரின் பிரசாரமாக காட்சியளித்து வருகிறது. அதே நேரத்தில் அனைத்து கருத்து கணிப்புகளும் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறது.
இந்த நிலையில் அக்னி நியூஸ் சர்வீசஸ்(ஏஎன்எஸ்) நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களைக் கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்னி நியூஸ் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில் கூறியிருப்பதாவது:வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 56 இடங்களைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. மண்டல வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 36 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அசுர பலத்துடன் உள்ளது. இங்கு அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
மத்திய மண்டலத்தில் 37-இல் 35 இடங்களையும், தென் மண்டலத்தில் 58-இல் 42 இடங்களையும் திமுக கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை மாநில அளவில் திமுக கூட்டணி 45.4 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக கூட்டணி 35.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தவெக 11.5 சதவீத வாக்குகளைப் பெறும். சீமானின் நாதக ஒட்டுமொத்தமாக 5.6 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான தரவுகளின்படி, சென்னை (16), திருவள்ளூர் (10), திருச்சி (9), தஞ்சாவூர் (8), மற்றும் காஞ்சிபுரம் (4) போன்ற மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் வென்று முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தும் எனத் தெரிகிறது.
அதேபோல் நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், ராமநாதபுரம், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் திமுக கூட்டணி 100% இடங்களைக் கைப்பற்றும் என ஆய்வு கூறுகிறது. திமுக தலைமையிலான அணி திருவள்ளூர்(10 தொகுதிகள்)), சென்னை( 16 தொகுதிகள்), காஞ்சீபுரம்(4 தொகுதிகள்) உள்ளிட்டமாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும். இதே போல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள், நீலகிரி 3 தொகுதிகள், தஞ்சாவூரில் 8 தொகுதிகள், ராமநாதபுரம் 4 தொகுதிகள், அரியலூர் 2 தொகுதிகள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
