நேருக்கு நேர் சந்திக்க தில் இல்லாம வேட்பாளரையா விலைக்கு வாங்குறீங்க… எடப்பாடியை தோற்கடிக்க விஜய் ரசிகர்கள் சபதம்

தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிவித்தார். சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், வேட்புமனு தாக்கலின்போது வேண்டும் என்றே தவறான தகவலை தெரிவித்தார். இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின்போது, கழிவறை சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் தலைமறைவாகி விட்டார். இதனால் தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

வேட்பாளரை கடத்தி சென்றுவிட்டதாக போலீசிலும் புகார் செய்தனர். ஆனால் இன்று வரை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அந்த வேட்பாளர் அயோத்தியாப்பட்டணம் பக்கமுள்ள வீராணத்தை சேர்ந்தவர் என்பதும் அதிமுகவில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளராக பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது. ஏற்காடு தொகுதியை சேர்ந்த அவர், இடைப்பாடி தொகுதிக்கு சென்றது எப்படி? என்ற கேள்வி தவெக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த அவரை திட்டமிட்டு தவெகவில் இணைய வைத்து, சீட்டை வாங்கி கொடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக சார்பில் யாரும் போட்டியிடாத வகையில் விலை கொடுத்து வாங்கி விட்டதாக தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்குவார், அவருக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்வோம் என்றிருந்த நிலையில் இடைப்பாடி தொகுதி தவெக தொண்டர்களின் கனவை அதிமுகவினர் சிதைத்து விட்டது அவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தேர்தலை சந்தித்து வருகின்றனர். ஆனால் தேர்தலை நேருக்கு நேர் சந்திக்க திராணி இல்லாத காரணத்தினால் தான் பணம் கொடுத்து வேட்பாளரை வாங்கியதில் என்ன திறமை இருக்கிறது என்றும் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்புடன் கேட்டு வருகின்றனர்.

இடைப்பாடி தொகுதியில் மட்டும் ஓட்டுப்போட முடியாத நிலைக்கு தள்ளிய எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடத்தை கற்பிப்போம் எனவும் அவர்கள் சபதம் எடுத்துள்ளனர். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைத்து எங்களை தவெகவுக்கு ஓட்டுப்போட விடாத காரணத்தினால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், அதே நேரத்தில் அவரை நேருக்குநேர் எதிர்கொள்ளும் திமுகவுக்கு ஓட்டுக்களை செலுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எங்கள் கட்சியை சந்திக்க முடியாமல் செய்தவருக்கு நாங்கள் கொடுக்கும் தண்டனை இதுவாகத்தான் இருக்கும் எனவும் அவர்கள் கூறிவருவதுடன், இடைப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வியை பரிசாக வழங்குவோம் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

Related Stories: