கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி, ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம், வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா ஆகியோரை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போராட்டத்தால், அப்பாவி தொழிலாளர்கள் 13 உயிரிழப்புக்கு காரணமாக இருந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டாராம்.
சாத்தான்குளத்தில் கொரோனா காலத்தின் போது அப்பாவி வியாபாரிகளான தந்தை, மகன் இருவரும் விசாரணையின் பேரில் போலீசாரால் மிகவும் அநியாயமாகவும் கொடூரமாகவும் கொல்லப்பட்டனர். இப்படி நடந்த லாக்கப் மரணத்திற்கும் நீதியை நிலைநாட்டி அதற்கு நியாயம் பெற்றுத் தந்தது திமுக அரசு தான். ஒன்றிய அரசின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், அவர்களின் துரோகங்களை துணிந்து எதிர்க்கிற, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரேகட்சி திமுக.
எங்களின் கூட்டணி கட்சிகளால் மட்டுமே தமிழகத்தை பாதுகாக்க முடியும். இந்த தேர்தலில் அடிமை அதிமுகவையும் பாஜ சங்கி கூட்டத்தையும் தமிழ் நாட்டிற்குள் வரவிடக்கூடாது. வாக்காளர்களாகிய நீங்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அமோகமாக வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘நயினார் டெபாசிட் இழக்க வேண்டும்’
சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கடற்கரைராஜை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிசாமி அவரது காலிலும், பின்னர் சசிகலா காலிலும் விழுந்து கிடந்தார். இன்று டெல்லிக்கு போய் மோடியின் காலை பிடித்து தொங்குகிறார். தமிழ்நாட்டை நாம் ஜெயித்து டெல்லியை ஓட ஓட விரட்ட வேண்டும். டெல்லியில் இருந்து பாஜ எந்த திட்டத்தையும், நிதியையும் கொடுப்பதில்லை.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். அப்படிப்பட்ட பாஜ சங்கி கூட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். திருநெல்வேலியில் டெபாசிட் இழந்து விடுவோம் என்ற பயத்தில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அவரை சாத்தூர் தொகுதி மக்கள் தக்க பதிலடி கொடுத்து டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’’ என்றார்.
