* வரும் ஜூனில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்க முடிவு
புதுடெல்லி: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான புரோ – ரேட்டா முறையை கையாள ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்கட்சிகளின் கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ எனப்படும் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைக்காமல் நேரடியாக அமல்படுத்தும் வகையில் புதிய சட்டத்திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நாளை (ஏப். 16) முதல் வரும் 18ம் தேதி வரை 3 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் சட்டசபைகளின் பலத்தை அதிகரிப்பதற்கான 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் புதிய எல்லை நிர்ணய ஆணையத்தை அமைப்பதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, 2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவடையும் வரை காத்திருக்காமல், 2029ம் ஆண்டு பொதுத்தேர்தலிலேயே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் 334ஏ சட்டப்பிரிவில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை சுமார் 50 சதவீதம் உயர்த்தி, 816 முதல் 850 இடங்களாக அதிகரிக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது. இதன் மூலம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் போது, தற்போதுள்ள ஆண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் சமநிலை பேண முடியும் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. நேற்று வெளியான வரைவு மசோதா தகவல்களின்படி, மாநிலங்களில் இருந்து 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வகையில் உச்சவரம்பு மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இதேபோல், நாடு முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 4,123ல் இருந்து சுமார் 6,186 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களவையில் பெண்களுக்கான இடங்கள் தற்போதைய 82ல் இருந்து 273 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் தொகுதிகளை மறுவரையறை செய்தால், மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனை தவிர்க்க, அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமான விகிதாச்சார அடிப்படையில் இடங்களை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளைக் களைய ‘புரோ-ரேட்டா’ (Pro-Rata) என்ற புதிய விகிதாச்சார அதிகரிப்பு முறை மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு கையாள்கிறது. இதன் மூலம் 2029ம் ஆண்டு தேர்தலில் விரிவுபடுத்தப்பட்ட நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண் உறுப்பினர்கள் அமர்வது உறுதி செய்யப்படும். இந்த நடைமுறைகளை கண்காணிக்க வரும் ஜூனில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டு தொகுதிகளின் எல்லைகள் இறுதி செய்யப்படும்.
இந்த ஆணையத்தின் உத்தரவுகள் சட்டபூர்வமானவை என்பதால் எந்த நீதிமன்றத்திலும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. ஒன்றிய அரசின் இந்த வேகமான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து சவால்களும் எழுந்துள்ளன. 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், பழைய புள்ளிவிபரங்களை வைத்து தொகுதிகளை மறுவரையறை செய்வது துல்லியமாக இருக்காது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், ஓபிசி பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தென்மாநில தலைவர்கள், மக்கள் தொகையை குறைத்த மாநிலங்களின் வாக்கு உரிமையை பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கக்கூடாது என்றும், இதற்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், பெண்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்வதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு தரப்பில் கூறுகையில், ‘பெண்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்த முடியாது. அதனால்தான் சிறப்பு கூட்டத்தொடர் மூலம் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு, 2029ம் ஆண்டு தேர்தலிலேயே இதனை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ பிரச்னைகள் சமமான முறையில் தீர்க்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி சட்ட வடிவம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் போது, தொகுதிகள் மறுவரையறை குறித்த கூடுதல் தெளிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் 2028ம் ஆண்டுக்குள் தொகுதி எல்லைகளை மாற்றியமைத்து, சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதிகளை இறுதி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஒன்றிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
‘புரோ-ரேட்டா’ முறை பங்கீடு எப்படி?
ஏற்கனவே நடைமுறையில் உள்ள 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு மாநிலம் மக்களவையில் பெற்றுள்ள இடங்களின் சதவீத விகிதம் மாறாமல் பாதுகாப்பதே இந்த ‘விகிதாச்சார அதிகரிப்பு முறை’ (‘புரோ-ரேட்டா’) ஆகும். தற்போதைய நிலையில் மக்களவையின் மொத்த இடங்கள் 543 ஆக உள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 39 இடங்களும் (சுமார் 7.2 சதவீதம்), உத்தரப்பிரதேசத்திற்கு 80 இடங்களும் (சுமார் 14.7 சதவீதம்) உள்ளன.
வரும் காலத்தில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, வெறும் மக்கள் தொகை வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொண்டால், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் இடங்கள் குறையவும், மக்கள் தொகை அதிகம் பெருகிய உத்தரப்பிரதேசத்தின் இடங்கள் பெருமளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கவே ஒன்றிய அரசு இந்த புதிய ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறது. இந்த புதிய முறையின்படி, மக்களவையின் மொத்த இடங்கள் 543ல் இருந்து 850 ஆக உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது தமிழ்நாட்டின் இடங்களை ஒதுக்கும்போது, அதன் தற்போதைய பங்கான 7.2 சதவீதத்தை புதிய மொத்த எண்ணிக்கையான 850ல் கணக்கிடுவார்கள்.
அதன்படி தமிழ்நாட்டிற்கு சுமார் 61 இடங்கள் கிடைக்கும். அதேபோல் உத்தரப்பிரதேசத்திற்கு அதன் பங்கான 14.7 சதவீத அடிப்படையில் சுமார் 125 இடங்கள் கிடைக்கும். இதன் மூலம், மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இரண்டு மாநிலங்களுக்குமே இடங்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ஒரு மாநிலத்தின் அரசியல் அதிகாரம் குறைந்துவிடாது. முக்கியமாக, மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பறிபோகாமல் இந்த விகிதாச்சார முறை பாதுகாக்கிறது. அதே நேரத்தில், கூடுதலாக உருவாகும் இந்த புதிய இடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதும் எளிதாகிறது.
மக்களை தவறாக வழிநடத்தும் மோடி
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் விபரங்கள் அனைத்து எம்.பி.க்களுக்கும் விநியோகிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், ‘ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ள இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், மக்களவையில் தென்னிந்திய மாநிலங்களின் பலம் மற்றும் பிரதிநிதித்துவம் பெருமளவில் குறையும். அதேபோல் வடமேற்கு இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களும் தங்களது செல்வாக்கை இழக்க நேரிடும்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் பிரதமர் மோடி நீண்டகால திட்டத்தை செயல்படுத்தி நாட்டை ஏமாற்றுகிறார்’ என்றார். ஏற்கனவே தொகுதி மறுவரையறை குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகள் மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் சமநிலையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
