மசோதா தோல்வி ராகுல் வீடு அருகே பாஜவினர் போராட்டம்

புதுடெல்லி: பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக என்று கூறி ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது. இதை கண்டித்து ராகுல் காந்தியின் வீட்டிற்கு அருகே பாஜ பெண் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி சுனேரிபாக்கில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வீட்டை நோக்கி பாஜ எம்பிக்கள் ஹேமமாலினி,கமல்ஜித் செஹ்ராவத்,பன்சூரி சுவராஜ் உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்றனர். இவர்களுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஒன்றிய அமைச்சர் ரக்‌ஷா கட்சே ஆகியோரும் வந்திருந்தனர். பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றாததை கண்டித்து ராகுல் காந்திக்கு எதிராக மகளிரணியினர் கோஷம் போட்டனர். பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்பது தெரிகிறது என்று ஹேமமாலினி குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் ராகுலின் வீடு அருகே போராட்டம் நடத்த முயன்ற பாஜவினர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர். அப்போதும் கலையாததால் பாஜ தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: