எதிர்க்கட்சிகள் சிசுக்கொலை செய்துவிட்டன மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காக எங்கள் போராட்டம் தொடரும்: பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கான எங்கள் போராட்டம் தொடரும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தொகுதி மறுவரையறையுடன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இணைத்து தாக்கல் செய்யப்பட்ட மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதுபற்றி பிரதமர் மோடி நேற்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மகளிர் மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளால் இம்மசோதா தடுத்து நிறுத்தப்பட்டது. நடக்கும் அனைத்தையும் நாட்டுப் பெண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கும் என எதிர்பார்த்தேன். நாங்கள் வடக்கு, தெற்கு என பிரித்து பார்த்தது இல்லை. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் கருக்கொலை செய்துவிட்டனர். நமது பெண்களின் கனவுகள் எவ்வாறு நசுக்கப்பட்டிருக்கின்றன என்பதை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறான். இந்தியப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான போராட்டம், எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியலால் முடங்கிப்போயுள்ளது. மகளிர் சக்தியை உதாசீனம் செய்து எதிர்க்கட்சியினர் பாவம் செய்துவிட்டனர். எதிர்க்கட்சியினர் செய்த பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். ஒரு பெண் எதை வேண்டுமானாலும் மறக்கலாம்; ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்க மாட்டாள்.

பெண்களுக்கு, அவர்களுக்குச் சட்டபூர்வமாக உரித்தான பங்கை வழங்குவதற்கான ஒரு நேர்மையான, உண்மையான மற்றும் புனிதமான முயற்சியாக இது அமைந்தது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்களைச் சம பங்காளிகளாக மாற்றும் ஒரு முயற்சியாக இது திகழ்ந்தது. இது காலத்தின் கட்டாயமாகும். நமது நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் — வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்துத் திசைகளையும் — வலுப்படுத்துவதற்கும்; மாநிலங்களின் பரப்பளவு அல்லது மக்கள் தொகையின் அளவைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் குரலையும் ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே இது. அனைவரையும் சம அளவில் அதிகாரமிக்கவர்களாக மாற்றும் ஒரு முயற்சியாக இது அமைந்தது. இருப்பினும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவிற்கான போராட்டம் தொடரும். எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாதது
இவ்வாறு மோடி பேசினார்.

* தொகுதி மறுவரையறை மசோதாவை பிரதமர் மோடி குறிப்பிடாதது ஏன்?
கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட்டது. அந்த சட்டப்படி உடனேயே 2024 மக்களவை தேர்தலில் அமல்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசு ஏற்கவில்லை. அடுத்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்த பிறகு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

ஆனால் திடீரென ஏப்.16ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி மகளிர் இடஒதுக்கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவற்றை இணைத்து ஒன்றாக மக்​களவையில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. மேலும் புதிய மசோதா அடிப்படையில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதி​கரிக்க ஒன்றிய அரசு திட்​ட​மிட்​டது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்​கிரஸ், சமாஜ்​வா​டி, திமுக உள்​ளிட்ட இந்தியா கூட்​டணி கட்​சிகள், அதனுடன் தொகுதி மறுவரையறை மசோதாவை இணைத்து தாக்கல் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் எம்பி தொகுதிகள் குறையும் அபாயம் உள்ளதாக தெரிவித்தன. இதை பிரதமர் மோடி ஏற்கவில்லை. இதை தொடர்ந்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது. ஆனால் பிரதமர் மோடி நேற்றைய பேச்சில் தொகுதி மறுவரையறையை விட்டு விட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் தோல்வி அடைய வைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

Related Stories: