19 ஆண்டு கால ஐபிஎல்லில் முதல் முறை வரலாற்று சாதனையை சொந்தமாக்கிய சன்ரைசர்ஸ்

ஐதராபாத்: 19வது ஐபிஎல் தொடரின் 21வது போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 57 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்த அணியின் 2 அறிமுக வீரர்கள்தான். முதல் முறையாக ஐபிஎல் அரங்கில் களமிறங்கிய சன்ரைசர்சின் வேகப்பந்து வீச்சாளர்களான பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன் இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ராயல்ஸ் பேட்டர்களை நிலைகுலையச் செய்தனர். முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி, ஜுரெல், லுவான் ட்ரே பிரிடோரியஸ் ஆகிய 3 விக்கெட்களை பிரஃபுல் ஹிங்கே வீழ்த்தினார்.

19 வருட ஐபிஎல் வரலாற்றில், நேற்று (ஏப்ரல் 13) வரை எந்தவொரு பௌலருமே ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதில்லை. மற்றொரு அறிமுக வீரரான சாகிப் ஹுசைன், 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அறிமுக ஐபிஎல் போட்டியில் ஒரு பௌலரின் நான்காவது சிறப்பான பந்துவீச்சு இது.

* கம்மின்ஸ் கம்மிங்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கடந்த ஜூலை மாதத்தில் முதுகு காயத்தால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவர் டி20 உலக கோப்பையை தவறவிட்டதுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அணிக்கு திரும்பாமல் உள்ளார். இதனால் இசான் கிசன் கேப்டன் பொறுப்பை கவனித்து வருகிறார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்த பேட் கம்மின்ஸ் நாளை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உடல் தகுதி சோதனையில் பங்கேற்க உள்ளார். அங்கு தேர்ச்சியாகி தடையில்லா சான்றிதழை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் அடுத்த நாளே ஏப்.17ல் இந்தியா திரும்பி சன்ரைசர்ஸ் அணியில் இணைவார் என்றும், மறுநாள் ஏப்.18ல் சன்ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் களமிறங்குவார் என்றும் ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்சின் டாப் அதிரடி ஆட்டக்காரர்களை கதறவிட்ட இளம்வேக புயல்களால் சன்ரைசர்ஸ் அணி மீண்டும் வெற்றி பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் ஆல்ரவுண்டரான பேட் கம்மின்ஸ் இணைவது அணிக்கு மேலும் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: