பரிதாபாத்: அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் தலைநகர் டெல்லி அருகே உள்ளது. அங்குள்ள பல்லப்கர் டபுவாவைச் சேர்ந்தவர் சந்தியா (29). அவர் தனது கணவருடன் வசித்து வந்தார். மேலும் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல அவர் காலை 9:30 மணியளவில் பள்ளிக்கு வந்திருந்தார். பள்ளி திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, முகத்தை மறைத்தவாறு பள்ளிக்கு வந்த நபர், ஆசிரியை சந்தியாவை சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பள்ளி ஊழியர்கள் இதுகுறித்து சந்தியாவிடம் தெரிவித்தனர்.
அதன்பின், சந்தியா பள்ளியின் பிரதான வாயிலை அடைந்ததும், அங்கு நின்று கொண்டு இருந்த அந்த நபர், ஆசிரியை சந்தியாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். அவரது கழுத்து, வயிறு, முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் 20 இடங்களில் சரமாரியாகக் குத்தினார். சந்தியா உதவி கேட்டு அலறியதுடன் அங்கிருந்து தப்பிக்கவும் முயன்றார். ஆனால் முகமூடி அணிந்த நபர் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார். சந்தியா கீழே விழுந்த பிறகும் சரமாரியாக குத்தினார். சந்தியாவின் சத்தத்தைக் கேட்டு, பள்ளி நிர்வாகி தேஜ்பால் விரைந்து வந்து முகமூடி நபரை பிடிக்க முயன்றார். அப்போது கத்தியை காட்டி எச்சரித்து விட்டு மீண்டும் சந்தியாவைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
மற்ற ஆசிரியர்கள் சந்தியாவுக்கு உதவ முயன்றனர். ஆனால் அதற்குள் சந்தியா பலியானார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சிசிடிவி கேமராவை ஆராய்ந்து கோட் கிராமத்தைச் சேர்ந்த அமித் (21) என்று என்பவரை சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சந்தியா வசிக்கும் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அமித் படித்து வந்ததாகவும், அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டு அவ்வப்போது அவரிடம் பேசியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆசிரியை சந்தியா அவருடன் பேச விரும்பாத போதிலும், அமித் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார். அதிருப்தி அடைந்த சந்தியா, அமித் மீது சில நாட்களுக்கு முன்பு பாலியல் சீண்டல் புகார் அளித்திருந்ததாகவும், ஆனால் அப்போது அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதால் விட்டுவிட்டதாகவும் தற்போது பழிவாங்கும் நோக்கிலேயே அமித் இந்தக்கொடூர கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
