திருப்பத்தூர் அருகே வனத்துறையினர் ரோந்து காப்புக்காட்டில் சருகுமானை வேட்டையாடிய 2 பேர் கைது

*2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே ரோந்து சென்ற வனத்துறையினர் காப்புக்காட்டில் சருகுமானை வேட்டையாடிய 2 பேரை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை சிங்காரப்பேட்டை வனச்சரக பகுதியில் உள்ள காப்புக்காட்டில் நாட்டுத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் மகேந்திரனுக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள் உடனடியாக அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக்காடு பகுதியில் அத்துமீறி நுழைந்து நாட்டுத்துப்பாக்கிகள் மூலம் அரிய வகை உயிரினமான இந்திய சருகுமான் ஒன்றை வேட்டையாடி 2 பேர் எடுத்துச்செல்ல முயன்றனர்.

வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவர்களை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மலையாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சங்கர்(47) மற்றும் அரசகன்னி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சங்கர்(32) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் வேட்டையாடப்பட்ட மான் மற்றும் அவர்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று வனவிலங்குகளை வேட்டையாடினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: