ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது: தன்னை கொலை செய்வதற்கு முன் தீர்த்துகட்டியது அம்பலம்

ஆவடி: ஆவடி அருகே ரவுடியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்விரோதத்தில் தன்னை கொலை செய்வதற்கு முன்பு முந்திகொண்டு ரவுடியை தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது. ஆவடி அடுத்த பொத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மீனா (35). இவர்களுக்கு 11 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மகள்கள் உள்ளனர். சதீஷ், நேற்று மாலை பொத்தூர் பகுதியில் உள்ள ஆலமரம் மணிகண்டபுரம் அருகே பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த மர்ம கும்பல் சதீஷை மடக்கி கத்தி மற்றும் இரும்பு கம்பிகளால் சரமாரி தாக்கிவிட்டு தப்பினர்.

இதனால் சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட, சொட்ட சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் பொத்தூர் பகுதியை சேர்ந்த பரத் (20) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தபோது, பரத்துக்கும், சதீசுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று காலை இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். அப்போது சதீஷ், வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து வெட்டி கொன்றுவிடுவேன் என பரத்தை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன பரத், தன்னை கொலை செய்வதற்கு முன் சதீஷை தீர்த்துகட்டிவிடவேண்டும் என நினைத்து முந்திக்கொண்டு கத்தியால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட சதீஷ், சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பரத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: