காவிரி விவகாரத்தில் தவெக அரசு மெத்தனம்; பலவீனமான ஆட்சி அமைந்ததால் மேகதாது அணை அமைக்க கர்நாடகா முயற்சி: தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

தஞ்சை: தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி அமைந்ததால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது என என தஞ்சையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டிப்பது, மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டிப்பது, காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டிப்பது, டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் நேற்று திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்று திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல காட்சி அளித்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு குறுவையை காப்பாற்ற முடியல. சம்பா என்ன நிலைமை ஆகும் என்று விவசாயிகள் தவித்து கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ ஒரு சாதாரணமாக நடக்குற விஷயம் கிடையாது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரு நிர்வாக திறனற்ற, ஒரு துப்பில்லாத முதலமைச்சரால் தான் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

2021லிருந்து 2025 வரைக்கும் அன்றைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு வருஷமும் சரியாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை தானே போய் திறந்து வைத்திருக்கிறார்.ஆனால் இந்த வருஷம் என்ன நிலைமை? இப்ப ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம். இன்னும் தண்ணீர் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பின்படி ஜூன் மாதத்திலே 9.9 டி.எம்.சி தண்ணீர், ஜூலை மாதத்திலே 31 டி.எம்.சி தண்ணீர் அப்படின்னு மொத்தம் 40 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்றைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதைப்பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய்திறந்து பேசுறாரா? பேச மாட்டேங்கிறார்.அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை என்ன? திமுக மேலே என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான். இங்கே தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துறதுக்கு காங்கிரஸ் ஆதரவு வேணும். அதனால் கர்நாடகா காங்கிரஸ் அரசை கேள்வி கேட்கத்துப்பில்லை. அவர் கர்நாடகாவை தட்டிக்கேட்க அச்சப்படுகிறார். அது மாதிரி ஒன்றிய அரசை பகைச்சுக்கிட்டா பிரச்னை வந்துவிடும். ஆட்சி அமைச்சு 3 மாதம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் அவர் வாயிலிருந்து பாஜ என ஒரு வார்த்தை வந்ததே கிடையாது. அவ்வளவு பெரிய தைரியசாலி.

அதுமட்டுமல்ல, மேகதாது பிரச்னையிலே ஒன்றிய பாஜ அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லிக்கு போராட போயிருக்கிறார்கள். அவர்களை மகாராஷ்டிரா காவல்துறை பாதியிலே நிறுத்தி, நாக்பூரில் ரயிலை வழிமறித்து, இறக்கிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு போக சொல்லிவிட்டார்கள். இதை பற்றியும் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. ஏன்? மகாராஷ்டிராவில் நடப்பது பாஜ ஆட்சி. அவங்களை எதிர்த்து பேசுறதுக்கும் இங்கே இருக்கக்கூடிய முதலமைச்சருக்கு துப்பில்லை, திராணி இல்லை. அந்த அளவுக்கு விவசாயிகளுடைய உரிமையை விட முதலமைச்சருக்கு அவருடைய சுயநலம், ஆட்சியை எப்படியாவது காப்பாத்திக்க வேண்டும். அந்த சுயநலம் மிக மிக முக்கியம்.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் சும்மா இருக்க முடியுமா அதனால் தான் இன்றைக்கு விவசாயிகளுக்காக உச்ச நீதிமன்றத்திலும் திராவிட முன்னேற்ற கழகம் சட்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆட்சி நடந்த போது மேகதாது அணையை கட்ட விடாமல் நாம் தடுத்தோம். கர்நாடகாவை தடுத்தோம். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மிக பலவீனமான ஒரு ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எப்படியாவது பயன் படுத்தி மேகதாது அணை கட்டலாம் என கர்நாடக அரசு முழு முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

கர்நாடகாவில அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, காவிரி பிரச்னையில் அவர்களுடைய ஒற்றுமையை காட்டுகிறார்கள். ஆனால் இங்க இருக்கக்கூடிய இந்த முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதையே மிகவும் ஒரு அவமானமாக நினைக்கிறார். நாம் இவர்களிடம் கேட்பதெல்லாம் தேர்தல் அறிக்கையில கூறியபடி முழு பயிர்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை செலுத்த வேண்டும், அதற்கு மிக மிக முக்கியமாக இந்த டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தாக வேண்டும்.

சட்டமன்ற கூட்ட தொடர் 5ம்தேதி (நாளை) தொடங்குகிறது. சும்மா விடமாட்டோம். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக நிச்சயமாக இந்த பிரச்னையை எழுப்பும். சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் உங்களுக்கு ஆதரவாக, உங்க குரலாக திமுக என்றென்றும் இருக்கும். டெல்டா விவசாயிகளுக்கும் திமுக என்றைக்கும் பக்கபலமாக இருக்கும். காவிரி பிரச்னையில தமிழ்நாட்டினுடைய உரிமையை என்றைக்கும் நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக முதன்மை செயலாளர் கே.என் நேரு வரவேற்றார். மமக பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, ம.ஜ.க மாநிலத்தலைவர் தமீமுன் அன்சாரி, எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், தி.க. மாநில பொதுச் ெசயலாளர் ஜெயக்குமார், தேமுதிக மாவட்ட செயலாளர் சிவனேசன், மக்கள் நீதி மையம் மாவட்ட அமைப்பாளர் தர்ம சரவணன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி ஆரோக்கியசாமி, திமுக எம்பி திருச்சி சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* ரீல்ஸ் வெறி முத்திப்போச்சு; படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் அமைச்சர்கள்

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்த ஆட்சியில் முதலமைச்சர் ரீல்ஸ் போடுகிறார். அமைச்சர்கள் ரீல்ஸ் போடுகிறார், சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளிக்கூடம், மருத்துவமனை, ஏன் பாத்ரூம், டாய்லெட்டை கூட விட்டு வைக்கிறதில்லை. உள்ள போய் ரீல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கிறார்கள். சில அமைச்சர்கள் அவங்களுடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு சென்று, அங்க இருக்கக்கூடிய குழந்தைகளையெல்லாம் வெளியே வரச்சொல்லி, அவர்களை கட்சி பேரை கோஷம் போட சொல்லி, அதை ரீல்ஸ் எடுத்து போட்டுக்கிட்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட ஒரு ஆட்சியை தமிழ்நாடு இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது என்றார்.

* ஜோக்கர் கூட்டம்

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,‘‘இங்க இருக்கக்கூடிய அமைச்சர்களுடைய லட்சணம் என்ன மாதிரி அமைச்சர்களை அமைத்திருக்கிறார்கள்? திருட்டு லாட்டரி விற்கிற ஒரு அமைச்சர். திருட்டு விசிடி வித்த ஒரு அமைச்சர், உருட்டு கட்டையோட சுத்திட்டு இருக்கும் ஒரு அமைச்சர், எல்லாத்துக்கும் மேல போதை பவுடர் விற்கும் அமைச்சர், இப்படி மொத்த கேபினெட்டுமே ஒரு ஜோக்கர் கூட்டமாக இன்னைக்கு தமிழ்நாட்டுல அமைந்திருக்கு’’ என்றார்.

* விஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்ப போராடுவோம்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம்-சட்டமன்றம்-நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `திமுகவின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும். விவசாய விரோதி விஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம். காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல, தமிழரின் உயிரைக் காக்கும் உரிமை நீர். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: