சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
