* முதல்வர் விஜய்யின் முடிவால் தமிழ்நாட்டிற்கு பெரும் பின்னடைவு என்றும் குற்றச்சாட்டு
சென்னை: காவிரி பிரச்னையை திசை திருப்பும் வகையில் திமுக மீது அவதூறு பரப்ப முயல்வதா என்று அமைச்சர் நிர்மல்குமாருக்கு திமுக வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் இ.பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் இ.பரந்தாமன் நேற்று அளித்த பேட்டி: நாக்கில் எலும்பில்லை என்பதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டுள்ளார் அதிகபிரசங்கி அமைச்சர் நிர்மல் குமார்.
நிர்மல் குமார் உசிலம்பட்டி கிராமத்தில் ஜட்டி போட்டுக்கொள்ளாத காலத்திலேயே காவிரி நதி நீர் பிரச்னை தீர்வுக்கு ஒரு தீர்ப்பாயத்தை உருவாக்கியவர் கலைஞர். நிர்மல் குமார் எல்லாம் கலைஞர் பற்றி பேச தகுதி துளியுமில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உள்ளனர் என்கிறார். மேலும் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கும் போது அனைத்து கட்சி கூட்டம் எப்படி கூட்டமுடியும் என கேட்கிறார் விஞ்ஞானி நிர்மல் குமார்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பது தான் அரசியல் கட்சி. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வது முதல்வருடைய வேலை. கர்நாடகாவில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சி தலைவரும் ஒன்றாக நிற்கிறார்கள். ஆனால் இன்றைக்கு விஜய்க்கு என்ன வெட்கம்? என்ன பெரிய கவுரவம், ஏன் எல்லா கட்சி தலைவரும் கூப்பிட மாட்டேங்கறாரு. நாட்டில் இருக்கக்கூடிய பிரச்னைகளை தீர்க்கின்ற எண்ணம் முதல்வருக்கு கிடையாது. பெஞ்ச் தேய்க்கிற முதல்வராக தான் இருக்கிறாரே தவிர, பெஞ்ச் மார்க்கோடு ஆட்சியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு துளியுமில்லை.
மிஸ்டர் நிர்மல் குமார் யாரு கிட்ட வந்து நீ பேசுற நாகரிகம் பற்றி. 205 டிஎம்சி காவிரி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் இருந்திருந்தா தெரிந்திருக்கும். காக்கி டிரவுசர் போட்டுகிட்டு ஆர்எஸ்எஸ் கிட்ட இருந்தீங்கனா எப்படி தெரியும். ஜூன் 12ம் தேதி காவிரி நீர் திறந்திருக்கணும். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தோம்னு சொல்றதுக்கு துப்புல்ல. இன்னைக்கு குறுவை போயிடுச்சு. இந்த தண்ணி இப்ப வருதுன்னா மழை பெஞ்சதுனால வருது.
உபரிநீரை எல்லாம் கொடுக்குறாங்க அவங்க. இதுக்கு மேல கர்நாடகா பூட்டி வைக்க முடியாது. இல்லன்னா அணை உடைஞ்சிரும். வடிகாலாதான் பயன்படுத்துகிறது என எங்களுடைய தலைவர் சொல்லி இருக்கிறாரே, இதையெல்லாம் கொஞ்சம் கூட இந்த அறிவே இல்லாம இந்த அரசு வாய்க்கு வந்தபடி பேசுறது. இவங்க பேசுற பேச்சுக்களுக்கு எல்லாம் இனி அவதூறு வழக்குகள் பாயும். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் இங்க வரும்போது ஒரு அறிவுஜீவி மாணிக் தாக்கூர் ஒரு பேட்டியை கொடுத்துக்கிட்டு இருந்தார்.
அவர் என்ன சொன்னாருன்னா தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளெல்லாம் ஒத்த கருத்தோட இல்ல. இவங்களுக்கெல்லாம் அரசியல் பண்றதுதான் இருக்கே தவிர தண்ணி வாங்குற அக்கறை இல்லைன்னு சொல்றாரு. அக்கறையை பத்தி யார் பேசுறது? நேத்து ஒருத்தர் வந்து டெல்லியில இருந்து இங்க வந்துட்டு எட்டப்பன் குட்டப்பன் என சொன்னாரே அவர் காவிரி நதிநீர் பிரச்னை பற்றி பேசினாரா.? அதற்கு தைரியம் இருந்ததா? அந்த கருத்தை சொல்றதுக்கு ராகுல் காந்திக்கு எழுதி கொடுக்க உங்களுக்கு துணிச்சல் இருந்ததா?
தமிழ்நாட்டினுடைய காவிரி நதி பிரச்னை பத்தி பேசாம போற ஒரு ஆளு அப்படிப்பட்ட தலைவர்களெல்லாம் வைத்திருக்கிற மாணிக் தாக்கூர்ல்லாம் திமுகவை பற்றியோ தமிழ்நாட்டில இருக்கக்கூடிய அரசியல் கட்சி தலைவர்களை பற்றியோ பேசுவதற்கு கொஞ்சமும் தகுதி கிடையாது. திமுக மூன்று கேள்வியை முன் வைக்கிறது. 24 மணிநேரத்தில் பதில் அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இன்றுவரை மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்காக டிரிப்யூனல் அமைப்பதற்கு என்ன நடவடிக்கை நீங்கள் எடுத்தீர்கள்?
நேற்றைக்கு முதல்வர் கோட்டையிலே அமர்ந்து கொண்டு அதிகாரிகளோடு காவிரி பிரச்னையை குறித்து விவாதித்ததாக சொன்னார்கள். அதனுடைய விளைவு என்ன, முடிவு என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் கர்நாடகாவுக்கு செல்லும் பயணம் என்பது உங்களிடமிருந்து சென்றது உங்களுடைய ரெக்வஸ்ட் லெட்டரை பொதுவழியில் நீங்கள் போட வேண்டும். விவசாயத்துறை அமைச்சர் சொல்லுகிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சரோ, முதல்வர் இருந்து வரக்கூடிய செய்திதான் முதல்வருடைய கான்கிரீட் பிளான் என்கிறார்.
அதே மாதிரி நிர்மல் குமார் சிஎம் ஆபீஸ்ல இருந்து சொல்ற டூர் ப்ரோக்ராம் தான் சிஎம் உடைய கன்பர்மேஷன் ப்ரோக்ராம்னு சொல்றாங்க. ஒரு முதல்வர் கர்நாடகாவுக்கு செல்கிறாரா இல்லையா என்பதை கூட வெளிப்படைத்தன்மையோடு ஒரு அறிக்கை விடுவதற்கு வக்கற்ற அரசாங்கம் இன்றைக்கு வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்கிறது. எனவே இந்த மூன்றையும் விளக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் மற்றும் இந்த அரசுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறோம்.
இத்தோட நிர்மல் குமார் போன்றவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசுவதை நிறுத்த வேண்டும். நீங்க வாய்க்கு வந்தபடி பேசுனீங்கன்னா எப்படி உங்க வாயை மூட வைக்கணும்ன்றது திமுகவிற்கு தெரியும். நாங்க கேட்ட இந்த மூணு கேள்விக்கு 24 மணி நேரத்தில உங்ககிட்ட பதில் இல்லைன்னா நீங்கள் தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகிகள் என்றுதான் காவிரி டெல்டா விவசாயிகள் பார்ப்பார்கள் என்பதை இதன் மூலமாக நிர்மல் குமாருக்கு நான் எச்சரிக்கிறேன்.
சட்டப் போராட்டம் நடத்துவதற்கு தாமதம் ஏற்படும் வகையில் முதல்வர் கர்நாடகா செல்கிறார் என்ற முடிவு தமிழ்நாட்டுக்கு வராது. ஒரு பெரும் பின்னடைவா ஏற்பட்டிருக்கு. இது கர்நாடகாவிற்கு தான் அட்வான்டேஜ். ஒன் அண்ட் ஒன்லி வே உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இன்ட்ரஸ்டேட் வாட்டர் டிஸ்ப்யூட் ஆக்ட் படி மேகதாது அணையை கட்டக்கூடாது என்பதற்கு டிரிப்யூனலை அமைப்பதுதான் ஒரே வழி. இந்த வழியை அவங்க மேற்கொள்ளாத வகையில் தமிழ்நாட்டுக்கு பின்னடைவுதான். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் விஜய்.
ஒரு முதல்வர் இன்னொரு மாநிலத்துக்கு வருவதை வேண்டாம்னு சொல்லக்கூடிய அவமானத்தை முதல் முறையா நடக்கிறது. தமிழ்நாட்டின் மீது இந்த அவமானத்தை கொண்டு வந்து சேர்த்த பெருமை பழி விஜய்யை சாரும். தமிழ்நாட்டுக்கு பெரிய அவமானத்தை விஜய் தேடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டை அவமானப்படுத்தி விட்டார் விஜய். காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்தி விட்டார். இன்னும் சொல்லப்போனால் விவசாயிகளின் துரோகி விஜய், விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.
