கொடைக்கானலில் பயங்கரம் வாலிபர் வெட்டிக் கொலை அதிமுக நிர்வாகி மகன் கைது: நண்பருக்கும் வெட்டு உறவினர்கள் மறியல்; வீடு சூறை, பைக் எரிப்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (26). இதே பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் ஜெயபால் மகன் ரகு (23). ராமர் வைத்திருந்த குதிரை, ரகு தோட்டத்தில் மேய்ந்ததில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தனது வீட்டருகே ராமர், உறவினரான 18 வயது வாலிபரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ரகு, ‘‘உன்னுடைய குதிரை என் தோட்டத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கிறது’’ எனக் கூறி ராமரை தனது தோட்டத்திற்கு அழைத்து சென்றார். வழியிலேயே ரகு திடீரென மறைத்து வைத்திருந்த வாளால் ராமரை சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த வாலிபரையும் வெட்டிவிட்டு தப்பியோடினார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், இருவரையும் மீட்டு பூம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ராமர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

காயமடைந்த வாலிபர், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி, அருகில் இருந்த தோட்டத்தில் பதுங்கி இருந்த ரகுவை நேற்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று காலை ராமரின் உறவினர்கள், ரகுவின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, வாசலில் நிறுத்தியிருந்த டூவீலரையும் தீ வைத்து எரித்தனர்.

மேலும், ரகுவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி, பூம்பாறை மேல்மலை பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் ஆர்டிஓ கீர்த்தனா மணி, எஸ்பி ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பதற்றத்தை தணிக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பூம்பாறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: