கேரள சிவசேனா தலைவர் சரமாரி வெட்டி கொலை: தாமிரபரணி ஆற்றில் உடல் வீச்சு

 

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இரட்டை ரயில் பாதை பணிக்காக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தின் கீழே தாமிரபரணி ஆற்றில் நேற்று ஒரு ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்தவர்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து தீயணைப்பு துறை உதவியுடன் உடலை மீட்டனர்.

இறந்து 3 நாட்களுக்கு ேமல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலில் சிவசேனா கட்சியின் அடையாளம் பச்சை குத்தியிருந்தது. இதையடுத்து குமரி மாவட்ட சிவசேனா நிர்வாகிகளை போலீசார் அழைத்து விசாரித்தனர். அவர்கள் சடலமாக கிடந்தவர் களியக்காவிளை அருகே செங்கவிளையை சேர்ந்த சுதீசன் மகன் அதுல் (32) என்றும், கேரள மாநில சிவசேனா தலைவராக இருந்தவர் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அதுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவரது முகம், கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுகாயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டு உடல் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதினர். இந்நிலையில் அதுலின் கார் சிதறால் மலைக்கோயில் அருகே காட்டுப்பகுதியில் தனியாக நிற்பதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்த போது காரின் ஷீட்டில் ரத்தகறை பல்வேறு இடங்களில் இருந்தது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து இந்த கொலையை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கார் அனாதையாக நின்ற சிதறால் பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது குழித்துறை, பாறசாலை பகுதியை சேர்ந்த 3 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் தலைமறைவான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுல் மீது பூவார், பாறசாலை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: