ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்; விவாகரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பு; மனைவி, மாமியார் சரமாரி வெட்டிக்கொலை

 

ராமநாதபுரம்: விவகாரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பால் மனைவி மற்றும் மாமியாரை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (34). வெளிநாட்டில் கூலி வேலை செய்துள்ளார். இவருக்கும், ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த சர்மிளா தாக்கூர் (31)) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், மகள் உள்ளனர். 8 மாதங்களுக்கு முன் சர்மிளா தாக்கூரின் நடத்தையில் செல்லமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றதால் செல்லமுத்து கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனால் இருவரும் 7 மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர். சர்மிளா தாக்கூர் வைகை நகரில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். ஆண் குழந்தை செல்லமுத்துவின் வீட்டில் வசித்து வந்தது. இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சர்மிளா தாக்கூரின் தந்தை முனியசாமி இறந்த நிலையில் தாய் பத்மாவதி, துபாய் சென்று பணியாற்றினார். சமீபத்தில்தான் விடுமுறையில் ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

இதற்கிடையில் சர்மிளா தாக்கூருக்கும், மற்றொருவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவர் செல்லமுத்துவின் கவனத்திற்குச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்து கடந்த சில நாட்களாக மனைவியை பின்தொடர்ந்து கண்காணித்து வந்தார். நேற்று காலை மகள், பேத்தியை பார்ப்பதற்காக பத்மாவதி, வைகை நகருக்கு வந்தார். உடனே மகளையும், தாய் பத்மாவதியையும் அழைத்துக் கொண்டு சர்மிளா தாக்கூர் பள்ளிக்கு கிளம்பினார். வீட்டு வாசலுக்கு வந்த போது அங்கு வந்த செல்லமுத்து, சர்மிளா தாக்கூருடன் தகராறில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்து அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். மகளை வெட்டுவதை பார்த்த பத்மாவதி தடுக்க முயன்றார். அவரையும் செல்லமுத்து சரமாரியாக வெட்டினார். இதில் தாயும், மகளும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே செல்லமுத்து, கேணிக்கரை போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: