புதுடெல்லி: மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜல் சக்தித் துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, ‘காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான நிதி உதவி கோரும் தமிழக அரசின் எந்தவொரு முன்மொழிவும் ஜல் சக்தி அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை. தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமும் ஒன்று. இதற்கான திட்ட அறிக்கை தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் 2020-ல் முடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
விரிவான திட்ட அறிக்கையின்படி, கோதாவரி-காவரி இணைப்புத் திட்டம் மூலம் காவிரிப் படுகைக்கு வரவுள்ள உபரி நீருக்குப் பதிலாக, காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளை அணையிலிருந்து சுமார் 2,252 மில்லியன் கன மீட்டர் நீரைத் திருப்பி விடுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய வறட்சிக்குள்ளாகும் மாவட்டங்களை உள்ளடக்கியது.
பாசனத்திற்கு நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும், வழித்தடத்தில் உள்ள பகுதிகளுக்குக் குடிநீர் மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக சுமார் 218 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குவதன் மூலமும் நிலத்தடி நீர் இருப்பை இத்திட்டம் மறைமுகமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இத்திட்டத்தினால் ஏற்படும் நிலத்தடி நீர் மறுநிரப்புதல் குறித்த தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, மத்திய நிலத்தடி நீர் வாரியம் இத்திட்டம் சார்ந்த எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார்.
