புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக டெங்கிஆல் எனப்படும் டெங்கு வைரசுக்கு எதிரான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான இறுதி கட்ட சோதனைகளை ஐசிஎம்ஆர் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் தரப்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவின் 8 மாநிலங்களில் 4 வகையான டெங்கு வைரஸ்களும் பரவி வருவது தெரியவந்துள்ளது.
டெங்கு வைரஸ்கள் டென்வி-1, டென்வி-2, டென்வி-3, டென்வி-4 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் வகைகள் பாதிக்கும் போது தீவிர டெங்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. எனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியானது 4 வகையான டெங்கு வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.
