தைராய்டு பாதிப்பால் உடல் எடையை குறைக்க முடியல: உருவ கேலிக்கு ஆளான நடிகை ஆதங்கம்

 

மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகை கிஷ்வர் மெர்ச்சன்ட், 2021ம் ஆண்டு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, தனது உடல் எடையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உருவ கேலி செய்து தொடர்ந்து இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். தற்போது அவரை உருவக் கேலி செய்வோருக்குக் கண்ணீர்மல்கக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆமாம், நான் எடை அதிகரித்திருக்கிறேன், அதற்கு இப்போது என்ன? கர்ப்ப காலத்தில் எனக்குத் தைராய்டு ஏற்பட்டது; தைராய்டு பிரச்னை இருக்கும்போது எடையைக் குறைப்பது மிகவும் கடினம் என்பது இந்த விஷயத்தைப் பற்றித் தெரியாத உங்களுக்குப் புரியாது.

எனது பெற்றோர், கணவர் மற்றும் குழந்தை எதுவும் சொல்லாதபோது, எங்களைப் போன்ற திரைப்பிரபலங்களை விலை கொடுத்து வாங்கிவிட்டது போல நினைத்துக் கொண்டு கேள்வி கேட்க நீங்கள் யார்? மதத்தின் பெயரால் சண்டையிடுபவர்கள் முதலில் மனிதநேயத்துடனும், அன்பாகவும் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கர்ப்பத்திற்கு முன்பு 68 கிலோவாக இருந்த எனது எடை, ஓராண்டு கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பிறகும் 72 கிலோவாகவே இருக்கிறது. தற்போது நான் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால் இந்த எடையைப் பற்றிக் கவலையில்லை’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: