*அதிகாரிகள் முன்னிலையில் பிரேதபரிசோதனை
ஆரணி : ஆரணி அருகே தாயே தான் பெற்ற பெண் குழந்தையை கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள துரிஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35), தொழிலாளி.
இவரது, மனைவி லட்சுமி(28), இவர்களுக்கு, 13 வயதில் மகன் உள்ளார். மேலும் குடும்ப தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன், லட்சுமி தனது கணவரை பிரிந்து சென்றார். அதன்பின்னர், படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் மதிவாணன்(30) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மதிவாணன் சென்னைக்கு சென்று வேலை செய்து வருகிறார். மேலும், கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கு, கடந்த 7ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் லட்சுமி தனது குழந்தையுடன் ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள மதிவாணன் வீட்டில் இருந்து வந்தார். மதிவாணன் சென்னைக்கு சென்றுள்ளதால், லட்சுமி குழந்தையை சரிவர பராமரிக்காமல், பால் கொடுக்காமல் இருந்ததால், தொடர்ந்து குழந்தை அழுது வந்தது.
இதனால், கடந்த 22ம் தேதி லட்சுமி, பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், லட்சுமி யாருக்கும் தெரியாமல், ஒருவரிடம் ரூ.500 கொடுத்து, கமண்டல நாகநதி ஆற்றில் குழி தோண்டி புதைக்க கூறியுள்ளாராம். இதுகுறித்து, தகவலறிந்த விஏஓ ஜோதிமுருகன், சந்தவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ரேகாமதி வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் விசாரணை நடத்தியதில், லட்சுமி பெண் குழந்தையை கொன்று புதைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போளூர் தாசில்தார் பாலாஜி, இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் முன்னிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி சட்டம் சார்ந்த மருத்துவ துறை தலைவர் சுதன்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், நேற்று பெண் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று, பிரேத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், சடலத்தை மதிவாணனிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில் போலீசார் லட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
