ஆற்காடு: ஆற்காடு நகர காவல் நிலையத்தில் நேற்று தவெக மாவட்ட செயலாளர் மீது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயது இளம்பெண், நேற்று ஆற்காடு நகர காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் என்னை இணைத்துக் கொள்வதற்காக அந்த கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகனை செல்போனில் தொடர்பு கொண்டு மகளிர் அணி பொறுப்பு வழங்க கேட்டிருந்தேன்.
சில நாட்கள் கழித்து விழாக்கள் செய்யும்போது என்னை அழையுங்கள் பங்கேற்கிறேன் என்றேன். பிறகு அவர் என்னுடைய இன்ஸ்டா பக்த்தில் மெசேஜ் செய்ய ஆரம்பித்தார். நானும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் அளித்தேன். அப்போது அவர் கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது. நான் உனக்காக செய்கிறேன் என்று என்னிடம் பேச ஆரம்பித்தார். தொடர்ந்து எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
மேலும் ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார். இதுகுறித்து ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிராவிடம் தெரிவித்தேன். அவர் விஜய் மோகனை அழைத்து பேசி அனைத்தையும் டெலிட் செய்து விட்டு இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்ளுமாறு கூறினார். நான் எல்லாவற்றையும் டெலிட் செய்து விட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 2 நாட்கள் கழித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு நான் வீடியோ எதையும் டெலிட் செய்யவில்லை. எல்லாம் என்னிடம் உள்ளது.
உன்னை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டி நான் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் என்று கூறி ஆபாசமாக திட்டி என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டினார். மேலும் யார் யாரோ என்னை திடீரென்று சந்தித்து மிரட்டி வருகிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆகவே தயவு செய்து நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய் மோகனை கைது செய்து அவருடைய செல்போனில் இருக்கும் என்னுடைய ஆபாச வீடியோக்களை டெலிட் செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் என்னிடம் பேசிய அனைத்து இன்ஸ்டாகிராம் ஸ்கிரீன் சாட்டுகளும் இந்த புகார் உடன் இணைத்துள்ளேன். இந்த புகார் அளித்த பிறகு அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் அவர் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் என்பதால் என் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எனக்கும் என் கணவர் மற்றும் என் குழந்தைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சிப்காட் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி ஆற்காடு நகர காவல் நிலையம் வந்து இளம்பெண்ணிடம் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தார். தொடர்ந்து இளம்பெண் கூறும்போது, ‘என்னைப் போன்று நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
